செய்திகள்

பாகிஸ்தான் முகாமில் நடந்த தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை கூறுங்கள் - காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானில் பாலகோட் முகாமில் நடந்த தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் உண்மையான எண்ணிக்கையை கூறுங்கள் என்று பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #pmmodi #kashmirattack

புதுடெல்லி:

புலவாமா தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த வாரம் பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதில், 300 பயங்கரவாதிகள் பலியானதாக கூறப்பட்டது. ஆனால், கடந்த சனிக்கிழமை, நிருபர்களை சந்தித்த மத்திய மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா, “பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறித்து ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத செய்தியை வெளியிடுகின்றன. எண்ணிக்கை பற்றி பிரதமரோ அல்லது மத்திய அரசின் செய்தித்தொடர்பாளரோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

அலுவாலியா கருத்தின் அடிப்படையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்வி விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மோடிஜி.. தங்களது மத்திய மந்திரிகள், தொலைக்காட்சி செய்திகளை பொய் என்று கூறுகிறார்கள். பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை பிரதமர் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள். இந்த எண்ணிக்கை உண்மையானதா? அப்படி பொய் என்றால், உண்மையான எண்ணிக்கையை பிரதமர் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்று எண்ணவில்லை என்று இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா கூறினார். அதைத்தொடர்ந்து, பிரதமர் அலுவலகம், முப்படைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இவற்றின் அடிப்படையில், திரிணாமுல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு கேள்வி விடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:-

ஆயுதப்படைகளை நாங்கள் நம்புகிறோம். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். வாய்ஜால ஜோடியைத்தான் நாங்கள் நம்பவில்லை. எவ்வித திட்டமும் இல்லாமல், பலியாவதற்குத்தான் நமது வீரர்களை அனுப்பிவைத்தீர்களா? அல்லது காரணத்துடனா?

தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதன் நோக்கமா? உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடை பின்னணியில் ஒட்டி வைத்து, அவர்களை அரசியல் கட்சியின் தனிப்பட்ட சொத்தாக ஆக்கியது நீங்கள்தானே?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT