செய்திகள்

இமாசல் பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலிருந்து 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு கடகுஷானி என்ற இடத்திற்கு தனியாருக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது.

பஞ்ஜார் பகுதியில் உள்ள மலைப்பாங்கான கோர்ச் என்ற பகுதியை கடக்கும்போது எதிர்பாராத விதமாக பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்தது. இதையடுத்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து பற்றி அறிந்ததும் மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், ஆளுநர் ஆசார்யா தேவ்ரத் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். 

இதற்கிடையே, இமாசல பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT