321 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள அபிநந்தன் சாக்லெட் சிலை 
செய்திகள்

புதுவையில் 321 கிலோ எடையில் அபிநந்தன் உருவ சாக்லெட் சிலை

புதுவையில் பெல்ஜியமிலிருந்து கொண்டு வரப்பட்ட சாக்லெட்டில் 321 கிலோ எடையில் அபிநந்தன் உருவ சிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை மிஷன் வீதியில் உள்ள தனியார் சாக்லெட் நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் மாதத்தில் பிரம்மாண்டமாக பல  உருவங்களில் சாக்லெட் சிலைகளை அவர்கள் செய்வது வழக்கம்.

இதன்படி இந்தாண்டு புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டபோதும் தைரியத்துடன் செயல்பட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் பலரின் பாராட்டுகளை பெற்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் உருவம் சாக்லெட்டால் தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது.

அபிநந்தன் சிலை 321 கிலோ சாக்லெட்டால் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் உயரம் 5 அடி 10 அங்குலம் ஆகும். இந்த சாக்லெட் சிலை செய்ய பெல்ஜியமிலிருந்து சாக்லெட் கொண்டுவரப்பட்டு சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை  அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் 124 மணி நேர கடின உழைப்பால் உருவாக்கி பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே மகாத்மா காந்தி, சுதந்திர தேவி சிலை, மிக்கி மவுஸ், அப்துல்கலாம் போன்ற பல சாக்லெட் சிலைகளை உருவாக்கி சாதனை படைத்தவர்.

வீரத்தின் வாயிலாக நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விங் கமாண்டர் அபிநந்தனுக்காக இந்த சாக்லெட்  சிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைமை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.