செய்திகள்

பீகாரில் 300 கல்லூரிகளில் இலவச வைஃபை சேவை - துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி

பீகார் மாநிலத்தில் உள்ள 300 கல்லுரிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச வைஃபை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல் மந்திரி சுஷில் குமார் கூறினார்.

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று இலவச வைஃபை சேவை. மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கும், அவர்களை புத்திசாலியாக மாற்றுவதற்கும் இது உதவியாக இருக்கும் என இந்த வாக்குறுதியை அளித்தார்.

அதன்படி கடந்த மார்ச் மாதம் பீகார் மாநிலம் உருவான தினத்தன்று இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆரம்பகட்டத்தில் 20 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பயன் பெற்றனர். தற்சமயம் 300 கல்லூரிகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைஃபை-யை பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து துணை முதல்வர் சுஷில் குமார் இலவச வைஃபை பற்றி நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநிலத்தில் 300 கல்லூரிகளில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் ஒரு முறை பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே சென்றால் போதும், வைஃபையை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். அதன் மூலம் வாட்ஸ்-அப் , பேஸ்புக், யூ டியூப் மற்றும் இ-காமர்ஸ் போன்ற செயலிகளை பயன்படுத்தலாம். மாணவர்கள் நாள் ஒன்றிற்கு 1 ஜி.பி. வீதம்  மாதத்திற்கு 10 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், மின்சாரம் இல்லாத போது வைஃபை சேவை பாதிக்காமல் இருக்க 23 கோடி ரூபாய் செலவில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கல்லூரிகளில் 60 பொறியாளர்கள் வைஃபை சேவையை மேற்பார்வை செய்து வருகின்றனர். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் அதனை சரி செய்து தருவர். இதன் மூலம் மாணவர்களுக்கு இண்டர்நெட்டை பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் வரும்.

என அவர் கூறினார்.