டமாஸ்கஸ்:
சிரியாவின் ரக்கா நகரில் பதுங்கியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் சிக்கி 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், உலகமெங்கும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஐ.எஸ் இயக்கத்தை ஒழிப்பதற்கான பணியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர்.
ஈராக்கில் ஐ.எஸ் வசமிருந்த பெரும்பாலான நகரங்களை அரசுப்படையினர் மீட்டுவிட்டனர். இன்னும், ரக்கா உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே அவர்கள் பதுங்கியிருந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவப்படைகள் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரக்கா நகரிக்கு உள்பட்ட சில கிராமங்களில் இருக்கும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுப்படையினரின் போர் விமானங்கள் மூலம் வான் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் அக்கிராமத்தில் வசித்து வந்த 15 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும், அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய வான் தாக்குதலில் சிக்கி மேலும் 15 பேர் பலியானதாக லண்டனில் இருந்து செயல்படும் சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.