சென்னை:
சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு நேற்றுடன் முடிந்துள்ளது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.
விநாயகர் சிலை விழா மற்றும் ஊர்வலத்துக்கு பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. உயரம் அதிகமான சிலைகளை வைக்கக் கூடாது. ஊர்வலமாக செல்லும்போது மிகவும் மெதுவாக செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
இந்த விதிமுறைகள் அனைத்தும் ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியே வகுக்கப்பட்டிருந்ததாகவும், இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்து இருந்தனர்.
இதுதொடர்பாக கடந்த 31-ந்தேதி நடந்த ஊர்வலத்தில் விதிமுறைகளை மீறியதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடைசி நாளான நேற்று நடந்த விநாயகர் ஊர்வலத்திலும் விதிமீறல்கள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தரமணி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக விநாயகர் ஊர்வல விதிமீறல் தொடர்பாக அதிக எண்ணிக்கையில் போலீசார் வழக்குப் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.