பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள். 
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தோப்பில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாலை மலர்

பனைக்குளம்:

மண்டபம் அருகே வேதாளை பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் ராமேசுவரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜ் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது வேதாளை தெற்குத்தெரு பகுதியில் உள்ள தோப்புகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 ஆயிரம் கிலோ கடல் அட்டைகள், ஆம்னி வேன் மற்றும் கடல் அட்டைகளை பதப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகளை தோப்பில் பதுக்கி வைத்திருந்த நபர்களை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.