செய்திகள்

நாளை முழு அடைப்பு போராட்டம்- கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மாலை மலர்

கோவை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக வியாபாரிகள் சம்மேளனம் ஆகியவறை சார்பில் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.

போக்குவரத்து தொழிலாளர்களும் முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் பஸ்கள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை போக்குவரத்து அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

முழுஅடைப்பு போராட்டத்தை முன்னிட்டு நாளை பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களும் நடக்கிறது.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

நகரின் முக்கிய பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்று மாலை முதலே போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதேபோல சூலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கவுணடம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கடைகளை அடைக்கச் சொல்லி யாரையும் வற்புறுத்தக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி கூறினார்.