கோவை:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 50). ஆடு வியாபாரி. இவரது நண்பர் சோமனூர் அருகே உள்ள செந்தில்பாளையத்தை சேர்ந்த தனபாலன் (30). இவர் சாமிநாதனிடம் தனக்கு தெரிந்தவர்களிடம் கோபுர கலசத்தில் வைக்கும் இருடியம் இருப்பதாகவும், இதனை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், நோய் பாதிப்புகள் ஏற்படாது என ஆசை வார்த்தை கூறினார்.
மேலும் இருடியம் வேண்டுமானால் ரூ. 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதனை உண்மை என நம்பிய சாமிநாதன், கடந்த வாரம் தனது நண்பர் தனபாலன் கூறிய திருப்பூர் குமாரசாமி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்கிற பந்தா ஆறுமுகம் (38). அதே பகுதியை சேர்ந்த ராஜா (43) ஆகியோரை நேரில் சந்தித்து முன்பணமாக ரூ. 5 லட்சத்தை 3 பேரிடம் கொடுத்தார்.
நேற்று இந்த 3 பேரும் சாமிநாதனை தொடர்பு கொண்டு இருடியம் தயாராக இருப்பதாகவும், பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள அம்பேத்கார் நகருக்கு தரவேண்டிய ரூ. 20 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வருமாறு கூறினர்.
இதனையடுத்து சாமிநாதன் அவர்கள் வரச் சொன்ன இடத்துக்கு சென்று காத்திருந்தார். அங்கு தனபால், பந்தா ஆறுமுகம், ராஜா ஆகியோர் ஒரு காரில் வந்தனர். பின்னர் 3 பேரும் காரில் இருந்து இறங்கி வந்தனர். அவர்கள் சாமிநாதனிடம் காரில் கோபுரகலச இருடியம் தயாராக இருப்பதாகவும், ரூ. 20 லட்சம் பணத்தை கொடுத்தால் இருடியத்தை தருவதாகவும் கூறினர்.
3 பேரின் பேச்சு சாமிநாதனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் பிரீத்தீவ்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்துவந்தனர். அங்கு ஆடு வியாபாரியிடம் இருடியம் இருப்பதாக கூறிய தனபாலன், பந்தா ஆறுமுகம், ராஜா ஆகியோரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அதில் ஒரு சில்வர் குடத்தை கோபுர கலசம் போல வடிவமைத்து அதில் மண்ணை போட்டு நிரப்பி, அதன் மீது பூஜை செய்யப்பட்டது போல காவி துணியை கட்டி இருடியம் என கூறி ஆடு வியாபாரியை மோசடி செய்ய முயன்றது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் 3 பேரையும் கைது செய்து போலீசில் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட அறுமுகம் என்கிற பந்தா ஆறுமுகம் தி.மு.க. பிரமுகர் ஆவார். அவர் திருப்பூர் மாவட்ட தி.மு.க.விவசாய அணி துணை ஒருங்கிணைப்பாளராக இருப்பது தெரிய வந்தது.
போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
சதுரங்க வேட்டை பட பாணியில் பணம் சம்பாதிக்க நாங்கள் 3 பேரும் திட்டமிட்டோம். அதன்படி கோவை பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சாமிநாதன் உள்பட 4 பேரிடம் இருடியம் இருப்பதாக கூறினோம்.
இதனை உண்மை என நம்பிய சாமிநாதன் மட்டும் ரூ. 5 லட்சம் முன்பணமாக கொடுத்தார். அவரை ஏமாற்றுவதற்காக சில்வர் குடத்தை கோபுரகலசம் போல வடிவமைத்து, அதனை கோபுர கலச இருடியம் என காட்டி மோசடி செய்ய திட்டமிட்டோம். பின்னர் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 3 பேரிடம் காரில் உள்ள சில்வர் குடத்தை காட்டி பணம் கொடுத்தால் உங்களுக்கும் இருடிய கோபுரகலசம் தருவதாக கூறினோம். அவர்கள் பணம் தருவதாக கூறி இருந்தனர்.
இதனையடுத்து சாமிநாதனிடம் குடத்தை கொடுத்து ஏமாற்றி பணத்தை வாங்க வந்தோம். அவர் எங்களை போலீசில் சிக்க வைத்து விட்டார். இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.
போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் இந்த கும்பல் கோபுர கலச இருடியம் தருவதாக மோசடி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.