வல்லம்:
தஞ்சையை அடுத்த மருங்குளத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ்(வயது 64). இவர் தஞ்சை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவராகவும், மருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருந்து வந்தார்.
இவர் சம்பவதன்று காலை 10 மணி அளவில் இவருடைய ஸ்கூட்டரில் மருங்குளத்தில் இருந்து கறம்பக்குடி செல்லும் சாலையில் நாகப்ப உடையான்பட்டியில் இருக்கும் அவருடைய வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.
நண்பகல் 12 மணி அளவில் வாழைத்தோட்டம் வழியாக மாடு மேய்க்க வந்தவர்கள் சுபாஷ்சந்திரபோஸ் பின் தலையில் வெட்டுப்பட்ட நிலையில் அங்கு கிடப்பதை சிலர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வல்லம் துணை போலிஸ் சூப்பிரண்டு சேதுராமன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
அதுசிறிது தூரம் சாலையில் ஓடி அருகில் உள்ள மற்றொரு தோட்டத்திற்கு சென்று விட்டு யாரையும் பிடிக்காமல் திரும்பி வந்தது. போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுபாஷ்சந்திர போஸின் மூத்த மகள் இந்திரா (வயது 32) கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில் வல்லம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ராஜேந்திரன், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் உட்பட சிறப்பு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர்.
போலீசாரின் தீவிர தேடுதலில் நேற்று தஞ்சையை அடுத்த மருங்குளம் அருகே உள்ள கோபால் நகரை சேர்ந்த பூங்கொடி(45), அவருடைய கணவர் அய்யாசாமி(58), மருங்குளத்தை சேர்ந்த இளங்கோவன்(45) ஆகியோரை மருங்குளம் கறம்பக்குடி சாலையில் உள்ள இளங் கோவனின் தோட்டத்தில் வைத்து கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:-
கொலை செய்யப்பட்ட சுபாஷ்சந்திரபோஸின் தோட்டத்தில் பூங்கொடி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பூங்கொடி அவருடைய இடத்தின் சொத்து பத்திரத்தை அடமானமாக கொடுத்து சுபாஷ்சந்திரபோஸிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் பூங்கொடி இருந்து வந்துள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பணத்தை தராமல் இருப்பதற்காக பூங்கோடி அவருடைய கள்ளக்காதலனான மருங்குளத்தை சேர்ந்த இளங்கோவனுடன் சேர்ந்து சுபாஷ் சந்திர போஸை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். சம்பவதன்று காலை பூங்கோடி சுபாஷ் சந்திரபோஸிற்கு போன் செய்து பணத்தை வாழை தோட்டத்திற்கு வந்து தருவதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இளங்கோவன் முன்னதாகவே சுபாஷ் சந்திரபோஸ் தோட்டத்திற்குள் வந்து அரிவாளுடன் மறைந்து நின்றுள்ளார்.
பூங்கொடியும் அவருடைய கணவர் அய்யாசாமியும் தோட்டம் அருகே நின்றுள்ளனர். சுபாஷ்சந்திர போஸ் வாழை தோட்டத்திற்கு உள்ளே வந்த போது மறைந்திருந்த இளங்கோவன் அவரை அரிவாளால் பின்தலையில் பலமாக வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். உடனே அங்கிருந்து தப்பிய இளங்கோவன் சற்று தொலைவில் உள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டியில் அரிவாள், ரத்தக்கறை படிந்த ஆடைகளை வீசி விட்டு சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வல்லம் போலீசார் பூங்கொடி, அவருடைய கணவர் அய்யாசாமி, கள்ளக்காதலன் இளங்கோவன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.