ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் அனந்நாக் மாவட்டத்தில் காசிகுந்த் என்ற இடத்தின் அருகே ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்தார். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து தப்பி ஓடிய பயங்கர வாதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவவீரர்கள் இறங்கினர். அப்போது பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை கண்டறிந்த ராணுவவீரர்கள் அவர்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே விடிய விடிய பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பயங்கரவாதி காயங்களுடன் தப்பி ஓடினார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் யவார் பஷீர், அபு புர்கான் மற்றும் அபு மவியா என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் 3 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இவர்களில் அபு புர்கான், அபு மவியா ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனவும், அபு புர்கான், கடந்த ஜூலை மாதம் அமர்நாத் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே தப்பி ஓடிய அந்த பயங்கரவாதி அமர்நாத் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர்.