வெற்றி பெற்ற குடும்பத்தினருக்கு கலெக்டர் கந்தசாமி பரிசு வழங்கினார் 
செய்திகள்

திருவண்ணாமலையில் 3 தலைமுறை செல்பி போட்டியில் 11 குடும்பத்தினருக்கு பரிசு

திருவண்ணாமலையில் 3 தலைமுறை செல்பி போட்டியில் வெற்றி பெற்ற 11 குடும்பத்தினருக்கு அம்மாவட்ட கலெக்டர் கந்தசாமி பரிசுக்கேடயம் வழங்கி பாராட்டினார்.

மாலை மலர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் சிறுவயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்துதல், பெண் சிசு கொலை ஆகியவை அதிகம் நடக்கிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெண் குழந்தை தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் பெண் குழந்தை அவரது தாய், பாட்டி ஆகிய 3 தலைமுறைகளுடன் செல்பி எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் போட்டோ அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் கந்தசாமி அறிவித்தார்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான குடும்பத்தினர் குழந்தை, தாய், பாட்டியுடன் செல்பி எடுத்து அனுப்பினர். இதில் 4 தலைமுறை போட்டோக்களும் எடுத்து அனுப்பினர். இதில் சிறந்த போட்டோக்களை கலெக்டர் தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் 3 தலைமுறை செல்பி புகைப்படம் போட்டியில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை தாமரை நகர் கோமளா தேவி குடும்பத்தினர், களம்பூர் சரிதா குடும்பத்தினர், அல்லிகொண்டாப்பட்டு ஜாய்ஸ் குடும்பத்தினர், தண்டராம்பட்டு கீதா குடும்பத்தினர், வேங்கிக்கால் அபிராமி குடும்பத்தினர், திருவண்ணாமலை சஹானா அன்பரசு குடும்பத்தினர், பல்லாத்தூர் முனியம்மாள் குடும்பத்தினர், சமுத்திரம் சல்மா பானு குடும்பத்தினர், வேங்கிக்கால் சோபியா குடும்பத்தினர், ஆரணி திருமூர் தமிழரசி குடும்பத்தினர், ஆரணிபாளையம் சத்தியா குடும்பத்தினர் ஆகியோருக்கு பரிசுக் கேடயம் வழங்கி பாராட்டினார்.

மேலும், தெய்வம் தந்த வரம் மகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற முதல் பரிசு எஸ்.கோகுல் குழுவினருக்கு ரூ.25,000, 2-வது பரிசு பிரசன்னா குழுவினருக்கு ரூ.15,000, 3-ம் பரிசு எபினேசன் மற்றும் கிரிதரன் குழுவினருக்கு ரூ.10,000 பரிசு தொகை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, முதன்மை கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் கந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், காவல் ஆய்வாளர் கவிதா, அரசு அலுவலர்கள், பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.