மதுரை:
மதுரை அனுப்பானடி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது19). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் மோதல் இருந்து வந்தது.
இந்த முன்விரோதத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கலையரசன் நண்பர் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வகையில் செந்தில் குமாரின் சகோதரர் சோப்பு செல்வக்குமார் என்பவரை கடந்த மாதம் 13-ந்தேதி கலையரசன் கூட்டாளிகள் அரிவாளால் வெட்டினர். பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் செந்தில்குமார் மற்றும் அவரது கோஷ்டியினர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் நேற்று கலையரசனை அரிவாளால் வெட்டினர். இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி செந்தில்குமார், ஏ.பி.சி.டி.அருண் (19), கோபிநாத், மதியழகன், கருப்பசாமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் செந்தில்குமார், ஏ.பி.சி.டி.அருண், கோபி நாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.