குருமூர்த்தி 
செய்திகள்

குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி - பெரியார் திராவிடர் கழகத்தினர் 3 பேர் அதிரடி கைது

சென்னையில் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்த பெரியார் திராவிடர் கழகத்தினர் 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சென்னை மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் வசித்து வருகிறார்.

அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலில் உள்ளனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன் காவல் பணியில் இருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் வந்து இறங்கினார்கள். திடீரென பைகளில் இருந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீச முயற்சித்தனர்.

அப்போது நாய் குரைத்ததால் போலீஸ்காரர் மணிகண்டன் உஷார் அடைந்து மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பம்மல் தமிழ், அயனாவரத்தை சேர்ந்த ஜனார்த்தனன், குமார் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.