விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனை அடுத்து இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தம்புல்லாவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது போல் முதலாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி நன்றாக செயல்பட்டது. ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தாலும், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 132 ரன்னும், கேப்டன் விராட்கோலி 82 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன் 28.5 ஒவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டிப்பிடிக்க வழிவகுத்தனர்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. அத்துடன் பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், கேதர் ஜாதவ், அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இளம் வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணி சற்று தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதலாவது போட்டியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் கொண்ட இலங்கை அணியின் விக்கெட்டுகள் பின்னர் மள, மளவென்று சரிந்தன. 77 ரன்களுக்குள் கடைசி 9 விக்கெட்டை இழந்த இலங்கை அணி 216 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
கேப்டன் தரங்கா உள்ளிட்ட இலங்கை அணியினர் கால்பந்து ஆடிய காட்சி.
இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடரில் இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்து வருவதால் அந்த நாட்டு ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த போட்டி முடிந்து திரும்பிய போது இலங்கை அணி வீரர்களின் பஸ்சை வழிமறித்து ரசிகர்கள் கோஷம் எழுப்பி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அத்துடன் அணி வீரர்கள் தேர்வு குறித்து இடைக்கால பயிற்சியாளர் நிக் போதாஸ் மற்றும் மானேஜர் அசன்கா குருசின்ஹா இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இதனால் நெருக்கடியில் இருக்கும் இலங்கை அணி வெற்றிக் கணக்கை தொடங்க முழு முயற்சியை மேற்கொள்ளும். வலுவான நிலையில் உள்ள இந்திய அணி தனது வெற்றி பயணத்தை தொடர நம்பிக்கையுடன் களம் காணும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒருநாள் போட்டியில் இலங்கை-இந்தியா அணிகள் இதுவரை 151 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்திய அணி 84 ஆட்டத்திலும், இலங்கை அணி 55 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 11 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இரு அணிகளும் இன்று மோதுவது 152-வது போட்டியாகும்.
பல்லகெலே மைதானத்தில் இலங்கை அணி 17 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் இலங்கை அணி 9 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. 7 ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி இந்த மைதானத்தில் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளது. 2012-ம் ஆண்டில் நடந்த இலங்கைக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை: குணதிலகா, டிக்வெல்லா, குசல் மென்டிஸ், தரங்கா (கேப்டன்), மேத்யூஸ், கபுகேதரா, ஹசரங்கா, திசரா பெரேரா, விஷ்வா பெர்னாண்டோ, மலிங்கா, லக்ஷன் சன்டகன்.
தொடர்ச்சியாக போட்டியில் விளையாட இருப்பது டோனிக்கு உத்வேகம் அளிக்கும் - விராட்கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி பல்லகெலேவில் நேற்று அளித்த பேட்டியில், ‘வரும் சீசனில் நடைபெறும் போட்டிகள் அணியில் வீரர்களின் பயன்பாடு மற்றும் வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கான அணிக்கு தயாராகுவது ஆகியவற்றை நிர்ணயிக்கக்கூடிய வாய்ப்பாக அமையும். அணியில் ஒரு வீரர் எந்த நிலையில் தேவைப்படுகிறார் என்பதை துல்லியமாக அறிவதாகவும் இது இருக்கும்.
அடுத்து தொடர்ச்சியாக பல போட்டிகள் நடக்க இருப்பது டெஸ்ட் போட்டியில் விளையாடாத டோனி உள்ளிட்ட மற்ற வீரர்களுக்கு நல்ல உத்வேகத்தை பெற உதவிகரமாக இருக்கும். பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அக்ஷர் பட்டேல் சிறப்பாக செயல்படுவதால் குல்தீப் யாதவை விட அவருக்கு அணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகியோருக்கு போதிய வாய்ப்புகள் கிட்டவில்லை. வரும் காலங்களில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
பொறுப்பற்ற முறையில் ஆடக்கூடாது - தரங்கா
இலங்கை அணியின் கேப்டன் தரங்கா அளித்த பேட்டியில், ‘அணி பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும் என்றால் தொடக்க 4 வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் கட்டாயம் அதிக ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமானதாகும். ஒரு வீரர் சதம் அடிக்கும் பட்சத்தில் அணியின் ஸ்கோரை 280 முதல் 300 ரன்கள் வரை உயர்த்த முடியும்.