செய்திகள்

2ஜி வழக்கை அலசி ஆராய்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்

2ஜி தீர்ப்பினை நீதிமன்ற தீர்ப்பாக மட்டுமே பார்க்க முடியும் எனவும் வழக்கை அலசி ஆராய்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது எனவும் தமிழிசை கூறியுள்ளார்.

மாலை மலர்

கோவை:

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

ஆர்.கே. நகர் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் பணம்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. மக்கள் பணத்தை ஊழல் மூலம் சுருட்டி இந்த பணத்தை தேர்தல் மூலம் மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால் தான் தேர்தல் நேர்மையாக நடைபெறும். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதில் அனைவரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள். ஆர்.கே. நகர் தேர்தலுக்கும், ஜெயலலிதா கிகிச்சை வீடியோ வெளியானதற்கும் சம்பந்தம் இல்லை என கூற முடியாது.

கெயில், ஓ.என்.ஜி.சி., நியூட்ரோன் போன்ற திட்டங்களில் மக்களுக்கு நன்மை குறித்து விளக்குவோம். மக்கள் ஒத்துழைப்பு இல்லாத எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்.

மக்களுக்கு நலன் பயக்கும் நல்ல திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் கெயில் திட்டத்தில் பாரதிய ஜனதா அரசு மக்களை குழப்புவதாக 7 மாவட்ட விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளார்களே? என கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் கூறி உள்ளாரே என பதில் அளித்தார்.

2ஜி தீர்ப்பினை நீதிமன்ற தீர்ப்பாக மட்டுமே பார்க்க முடியும். தனிப்பட்ட முறையில் இதுபற்றி சொல்ல ஒன்றுமில்லை. இழப்பு இல்லை என்பதால் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கி இருக்க கூடும். நீதிபதிகளின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்ல முடியாது.

வழக்கை அலசி ஆராய்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தீர்ப்பு குறித்து முழுவதும் படித்த பின்பே தீர்ப்பு குறித்து முழுமையாக பேச முடியும். இந்த தீர்ப்பை மட்டும் வைத்து முழுமையாக கருத்து சொல்ல முடியாது. அரசியலில் இருந்து லஞ்சம், ஊழல் ஒழிய வேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு. மக்களே ஊழல் செய்தவர்களை புறம் தள்ளுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் 2ஜி விடுதலையால் தி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருக்குமா? என்றனர்.

அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தர்ராஜன் அதைபற்றி சொல்லுவதற்கு ஒன்றுமில்லை என்றார். மேலும் கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று பிரதமர் சந்தித்தது தீர்ப்புக்கு காரணமா என்ற கேள்விக்கு நீதிமன்ற தீர்ப்புகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. தலையிடவும் மாட்டார்கள் என்றார்.