கொரோனா பாதிப்பால் பல மாநிலங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி நிற்கின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தரபிரதேசமும் ஒன்று.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் சூறாவளிகாற்று பல மாவட்டங்களை சின்னா பின்னாமாக்கி இருக்கிறது. நேற்று திடீரென அங்கு காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
பின்னர் காற்று பலமாக வீசி சூறாவளியாக மாறியது. மணிக்கு 50-லிருந்து 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசை வீடுகள் தூக்கி எறியப்பட்டன. ஏராளமான பொருட்களும் சேதம் அடைந்தன.
இவற்றின் இடிபாட்டுக்குள் சிக்கி 29 பேர் உயிரிழந்தார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதிகபட்சமாக காஷ்கஞ்ச் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்தார்கள். சிதாபூர், புலந்த்சாகர், படான் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர் உயிரிழந்தனர்.
மொத்தம் 38 மாவட்டங்கள் சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்டன. விவசாய பயிர்களும் கடுமையான சேதம் அடைந்தன.