மதுரை:
மதுரை பைக்காரா விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரகுமார் (வயது 49). இவர் சென்னையில் உள்ள ஜெனரேட்டர் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நரேந்திரகுமார் கடந்த 20-ந் தேதி குடும்பத்தினருடன் சென்னை சென்று விட்டார். இன்று காலை வீடு திரும்பினார். அங்கு கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடையச் செய்தது. வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த 27 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. இந்த துணிகர கொள்ளை குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் நரேந்திரகுமார் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்த பின்னர் சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக் கொண்டது. கொள்ளையில் துப்பு துலக்க வசதியாக கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
நரேந்திரகுமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை அறிந்தே கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.