புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 44 ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமை இந்திய விமானப்படை குண்டுகள் வீசி அழித்தது. அதில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தங்கள் முகாம் அழிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக கூறினார்கள். இதற்காக அவர்கள் பாலகோட் முகாமை சீரமைத்து மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
பயங்கரவாதி மசூத் அசாரின் உறவினர் யூசுப் என்பவன் இந்த பயங்கரவாத முகாமை சீரமைத்து பயங்கரவாதிகளை சேர்த்து வருகிறான். இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்ற திட்டத்தில் அவன் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த முகாமில் 27 பயங்கரவாதிகளுக்கு தற்கொலை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறைக்கு அது விரிவான எச்சரிக்கை தகவலை அளித்துள்ளது.
இதற்கிடையே சர்வதேச உளவு நிறுவனங்களும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த ஊடுருவும் முயற்சிகளில் இறங்கி இருப்பதாக எச்சரித்துள்ளன. இதையடுத்து இந்தியாவின் எல்லைப் பகுதியில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் முன்பு அவர்களை அழிப்பதற்கான திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது.