கோப்புக்காட்சி 
செய்திகள்

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 25 பேர் பலி

ஏமனில் ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அரசுப்படையை சேர்ந்த 25 வீரர்கள் உயிரிழந்தனர்.

சனா:

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் மோதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. உள்நாட்டு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது கார் குண்டு வெடிப்பு, ஏவுகணை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது.  

இந்நிலையில், அந்நாட்டின் சடா மாகாணத்துக்கு உள்பட்ட கடாப் பகுதியில் உள்ள அரசுப் படையினரின் ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சில படைவீரர்களை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து சென்றுள்ளதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT