செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கோவை ரெயில் நிலையத்தில் 24 மணி நேர உதவி மையம்

ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் பெண்களுக்கு உதவி செய்வதற்காக கோவை ரெயில் நிலையத்தில் 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை:

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கு ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

ரெயில்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களிடம் நகை பறிப்பு, கேளி-கிண்டல் செய்தல், பாலியல் தொந்தரவு கொடுத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து ரெயில்களிலும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் பெண்களுக்கு உதவி செய்வதற்காக கோவை ரெயில் நிலையத்தின் நுழைவாயில் அருகே பெண்களுக்கான 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறியதாவது:-

ரெயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு, திருட்டு, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. நிறைய பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் போலீசாரிடம் புகார் அளிக்காமல் சென்று விடுகின்றனர். எனவே ரெயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் புகார் செய்ய ரெயில் நிலைய நுழைவாயிலில் 24 மணிநேர பெண்கள் உதவி மையம் அமைத்துள்ளோம்.

இங்கு 24 மணி நேரமும் 4 பெண் போலீசார் பணியில் இருப்பர். அவர்களிடம் ரெயிலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்கலாம். இதன்மூலம் குற்றசம்பவங்களை தடுக்க முடியும். ரெயில் சம்பந்தமான தகவல், ரெயிலில் உள்ள குறைகள் பற்றியும் புகார் அளிக்கலாம்.

மேலும் 2 வாரத்துக்கு இந்த உதவி மையம் இங்கு செயல்படும். அதன் பின்னர் 1- வது பிளாட்பாரத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் செயல்படும்.

மேலும் 182 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

SCROLL FOR NEXT