லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிமான்ஷு சுக்லா என்பவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்கு தற்சமயம் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் 1995-ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த கல்லு என்பவரை அடித்துள்ளார். இதனால் சுக்லா மீது கல்லுவின் பெற்றோர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. 2011 ம் ஆண்டு முதல் சுக்லா இந்த வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில், கடந்த 15-ம் தேதி அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அவர் ஒரு மாதத்திற்கு அரசு சுகாதார மையத்தில் துப்புரவு தொழிலாளராக பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதுகுறித்து சுக்லா கூறுகையில், 'நான் சிறு வயதில் செய்த தவறுக்கு இப்போது தண்டனை கிடைத்துள்ளது. இந்த தண்டனையினால் என் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நடக்கும் போது இருவருக்கும் 9 வயது தான் ஆனது. எதற்காக அடித்தேன் என்பது கூட மறந்து போனது' என அவர் கூறினார்.
22 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறுக்காக சுக்லா நீதிமன்றத்தின் ஆணைப்படி துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.