மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின.
மேலும் கிழக்கு கோபுர பிரகாரத்தில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் இடிந்து விழுந்தது. அந்தப்பகுதியில் இருந்த தூண்கள் மற்றும் சிலைகள் கருகின. 5-க்கும் மேற்பட்ட தூண்கள் கீழே சாய்ந்தது.
இந்த பயங்கர தீ விபத்துக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகள் காரணம் என்று கண்டறியப்பட்டதால் சம்பந்தப்பட்ட கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கியது.
ஆனால் கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்களுக்கு மாற்று இடம் தந்தால் உடனடியாக காலி செய்வதாகவும் கூறினர்.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், வீரவசந்த ராயர் மண்டப பகுதிகளில் உள்ள தீப்பிடித்து எரிந்த கடைகள் போக மீதமுள்ள 22 கடைகளை இன்று மதியம் 12 மணிக்குள் அகற்ற உத்தர விட்டார்.
மேலும் அந்த கடைகளில் உள்ள பொருட்களை வேறு இடத்தில் வைப்பதற்கு கோவில் நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கோர்ட்டு உத்தரவையடுத்து இன்று காலை கடை உரிமையாளர்கள் கோவில் வளாகத்துக்குள் வந்தனர். அங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் போலீசாரும் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக எடுத்து அப்புறப்படுத்தினர். 22 கடைகளும் காலி செய்யப்பட்டன.
ஏற்கனவே தீப்பிடித்து எரிந்த 34 கடைகள் மற்றும் காலி செய்யப்பட்ட கடைகள் உள்ள பகுதிகளில் மராமத்து பணி விரைவில் தொடங்க உள்ளது.
காலி செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு புதுமண்டபம் அருகே உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஆலோசனை நடத்தியது. குன்னத்தூர் சத்திரத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் அந்தப்பணி நிறுத்தப்பட்டு மத்திய அரசு வழங்கிய ரூ. 2 கோடியும் திருப்பி அனுப்பப்பட்டது.
இதனிடையே அந்தப் பகுதியில் மீண்டும் கடைகள் அமைக்க கடந்த ஆண்டு மாநகராட்சி பணியை தொடங்கியது. இதற்கான பணிகளை தற்போது முடுக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த குன்னத்தூர் சத்திரத்தில் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து காலி செய்யும் கடைகளுக்கு மாற்று இடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் மற்றும் தூண்களை மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
இவர்கள் தவிர நிபுணர் குழுவினர் மற்றும் ஐ.ஐ.டி. அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
சேதமடைந்த மண்டபம் மேலும் பாதிக்காத வகையில் நவீன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பக்தர்கள் மத்தியில் இன்னும் பதட்டமும், பரபரப்பும் அகலாத நிலையில், நேற்று கோவில் வளாகத்தில் மீண்டும் ஒரு தீ விபத்து சம்பவம் நடந்தது.
தெற்கு கோபுரம் அருகே கோவிலுக்கான குங்குமம் தயாரிக்கும் கூடமும், மின் வினியோக பவர் அறையும் உள்ளது.
நேற்று மாலை பவர் அறையில் இருந்து திடீ ரென கரும்புகை வெளியேறியது. இதை கண்ட குங்குமம் தயாரிக்கும் ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடிவந்தனர். அவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.