முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் 
செய்திகள்

தேர்தல் நிதி வசூலிப்பில் டிரம்பை முந்திய ஜோ பிடென்

தேர்தல் நிதி வசூலிப்பில் பிரசாரத்தின் மூலம் நிதி திரட்டியதில் டிரம்பை பின்னுக்கு தள்ளி ஜோ பிடென் அதிகப்படியான நிதியை வாரிக்குவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய மாகாணவாரியாக தேர்தல் நடந்து வருகிறது.

இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதன் மூலம் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஜனாதிபதி டிரம்பும், ஜோ பிடெனும் தங்களின் தீவிர பிரசாரத்தின் மூலம் தேர்தல் செலவுகளுக்காக நிதி திரட்டி வருகின்றனர். எனினும் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இருவரும் தேர்தல் பிரசாரங்களை ஒத்திவைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் பிரசாரம் மூலம் நிதி திரட்டியதில் டிரம்பை பின்னுக்கு தள்ளி ஜோ பிடென் அதிகப்படியான நிதியை வாரிக்குவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.தேர்தல் ஆணையத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி பொலிடிகோ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜோ பிடென் கடந்த மாதம் தனது பிரசாரத்தின் மூலம் 46.7 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.356 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம்) நிதி திரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் தனது பிரசாரத்தின் மூலம் 13 மில்லியன் டாலர் (ரூ.99 கோடியே 21 லட்சத்து 34 ஆயிரம்) மட்டுமே நிதி திரட்டியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.