செய்திகள்

21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது

21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது. #CommonwealthGames2018 #GoldCoast

மாலை மலர்

கோல்டுகோஸ்ட்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்தது.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் இன்று தொடங்கியது. 15-ந்தேதி வரை 12 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. தொடக்க விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, கனடா, தென்ஆப்பிரிக்கா பாகிஸ்தான், வங்காளதேசம் உள்பட 71 நாடுகள் பங்கேற்கின்றன. வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இந்த போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

மொத்தம் 19 விளையாட்டுகள் 275 பிரிவில் நடக்கிறது. பெண்கள் ரக்பி, பீச் வாலிபால் ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 4,500 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 474 பேரை களத்தில் அனுப்புகிறது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 218 இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத் துமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல், தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஸ்குவாஷ், டேபிள் டென் னிஸ், பளுதூக்குதல் ஆகிய வற்றில் இந்தியா பதக்கங் களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்தியா எப்போதுமே 2-வது இடத்தை பிடித்து வந்துள்ளது. இதனால் இந்த முறை இந்த விளையாட்டில் பதக்கங்களை குவிக்கும்.

ஹீனா சிந்து, மனுபாகர், ஜிதுராய், உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் தங்கப்பதக்கம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடகளத்தில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), சீமா புனியா (வட்டு எறிதல்), தேஜஸ்வர் சங்கர் (உயரம்தாண்டுதல்) ஆகியோர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

கடந்த முறை பேட்மின் டனில் இந்தியா 1 தங்கம் உள்பட 4 பதக்கங்களை கைப்பற்றியது. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து காமன்வெல்த்தில் தங்கம் வெல்வார் என்று கருதப்படுகிறது. கடந்த முறை அவர் வெண்கலம் வென்று இருந்தார்.

இதே போல சாய்னா நேவால் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் கடந்த முறை காயம் காரணமாக ஆடவில்லை. 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த்தில் அவர் தங்கம் வென்று இருந்தார். இதே போல ஸ்ரீகாந்துக்கும் பதக்க வாய்ப்பில் உள்ளார்.

குத்துசண்டையில் கடந்த முறை ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. தற்போது மேரிகோம், விகாஷ் கிஷ்ண் அமித் பங்கல் ஆகியோர் பதக்கங்களை பெறலாம் என எதிர்பார்ப்பு இருக்கிறது.

காமன்வெல்த் மல்யுத்தத் தில் கடந்த முறை இந்தியா 2-வது இடத்தை பிடித்து இந்த முறை சுசில்குமார், சாக்ஷிமாலிக், வினேஷ் போகத், ஆகியோர் பதக்கம் வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுசில்குமார் கடந்த காமன்வெல்த்தில் தங்கம் வென்றார்.

இதே போல ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோ‌ஷல் ஆகியோர் மீது நம்பிக்கை இருக்கிறது. தீபிகா-ஜோஸ்னா ஜோடி தங்கம் வென்று இருந்தது.

டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சரத்கமல் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் வென்று இருக்கிறார். இதேபோல பளு தூக்கும் வீராங்கணை மீராபாய்க்கு தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. #tamilnews