சென்னை:
சென்னை மற்றும் சுற்றப்புற பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. கோவிலம்பாக்கம், நன்மங்கலம் பகுதிகளில் மெட்ரோ வாட்டார் சப்ளை வசதி இல்லை. இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வறண்டு விட்டதால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை.
இந்த பகுதியில் வசிப்பவர்கள் கிணறுகளில் இருந்து எடுத்து வந்து லாரிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை நம்பியே இருக்கிறார்கள். ஒரு லாரி தண்ணீர் ரூ.1200 விலைக்கு வாங்கி தொட்டிகளில் நிரப்பி தேவைக்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்த பகுதிகளுக்கு ஜெயேந்திரர் நகர், திருமுல்லைநகர் பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் பிடிக்கப்படும். அங்கிருந்து நன்மங்கலம், ராதாநகர், இந்திராநகர், நேருநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படும்.
சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தண்ணீரை நம்பியே உள்ளனர். தினமும் சுமார் 100 லாரிகளில் தண்ணீர் சப்ளையாகும்.
இந்த நிலையில் திருமுல்லைநகர் பகுதியில் கிணறுகளில் தண்ணீர் எடுக்க சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து தண்ணீர் பிடிக்க போலீசார் தடை விதித்து விட்டனர்.
இதனால் அந்த பகுதியில் தண்ணீர் விற்பனையில் ஈடுபட்டுள்ள தனியார் லாரி உரிமையாளர்கள் 2 நாட்களாக லாரிகளை இயக்கவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் குளிப்பது, துவைப்பது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். கேன் தண்ணீரை வாங்கி சிலர் குளிக்கிறார்கள்.
கடுமையான வறட்சி நிலவும் இந்த நேரத்தில் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் தடுத்தால் மக்கள் எப்படி சமாளிப்பார்கள்?
இந்த நேரத்தில் பணம் கொடுத்தும் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கும் உள்ளது.