மதுரையில் முழு கடையடைப்பையொட்டி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
அ.தி.மு.க. சார்பில் கடந்த 3-ந் தேதி உண்ணாவிரதம் இருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி இன்று காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மதுரையில் இன்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுரை சென்ட்ரல் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வர்த்தக நிறுவனங்களும் திறக்கப்படவில்லை.
மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அரசு பஸ்களை பொறுத்தவரை 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன. பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.
மதுரையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே இன்று செயல்பட்டது. இதனால் தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படவில்லை.
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதால் மதுரை ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்டவாளங்களிலும் ரோந்து பணிகள் நடக்கின்றன.
ரெயில் மறியலை தடுக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் முக்கிய பகுதிககளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்டோக்கள், லாரிகள் வழக்கம் போல ஓடின. 90 சதவீத தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.
நகர் பகுதிகளில் ஒரு சில மினி பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.