மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 358 அமைப்பாளர்கள், 71 சமையலர்கள் மற்றும் 559 சமையல் உதவியாளர் என 988 காலிபணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை கலெக்டர் வினய் கடந்த மாதம் 26-ந் தேதி வெளியிட்டார். மேலும் அவர் இதற்கான விண்ணப்ப படிவங்களை 5-ந் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது வெறும் 6 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதாவது விடுமுறை நாட்கள் தவிர 28, 29, 30, 1, 2, 5-ந்தேதி என 6 நாட்களில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதுமட்டுமின்றி விண்ணப்பத்தோடு பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆவணங்களை குறுகிய காலத்திற்குள் பெற முடியவில்லை என பலரும் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். உடனே கலெக்டர் ஆவணங்கள் சமர்ப்பிக்காவிட்டாலும் விண்ணப்பங்களை மட்டும் பெற்று கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், மதுரை மாநகராட்சி மற்றும் திருமங்கலம் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுத்து ஒப்புதல் ரசீது பெற்று கொண்டனர். இந்த விண்ணப்பங்களை வழங்க அந்தந்த அலுவலகங்களில் அதிக அளவில் பெண்கள் குவிந்தனர்.
கடந்த சனிக்கிழமை வரை சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 10 ஆயிரம் பேரும், சமையலர் பணிக்கு 350 பேரும், உதவி சமையலர் பணிக்கு 3 ஆயிரத்து 500 பேரும் என 13 ஆயிரத்து 850 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். கடைசி நாளான இந்த பணிக்கு விண்ணப்பம் செய்த சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அதன்படி மொத்தம் 988 பணியிடங்களுக்கு சுமார் 20 ஆயிரத்து 850 பேர் விண்ணப்பம் செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் 67 சத்துணவு அமைப்பாளர்கள், 11 சமையலர்கள், 82 உதவி சமையலர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்காக பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ஆசிக், வட்டாரவளர்ச்சி அலுவலர் பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா மகேஸ்வரி, கண்ணன் அலுவலக உதவியாளர்கள் குமரவேல், கவிதா, ரமணி ஆகியோர் விண்ணப்பம் பெற்றனர்.
விண்ணப்பம் கொடுக்க நேற்று கடைசி நாள் என்பதால் பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் டோக்கன் வாங்குவதில் பெண்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாலை 5.40 மணி வரை மக்கள் காத்து நின்று விண்ணப்பங்களை வழங்கி சென்றனர்.