ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் ஒன்றாக இணைந்து சுக்மா மாவட்டத்தில் தீவிர தேடுதல் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின்போது சிந்தகுபா மற்றும் சிந்தால்னர் பகுதிகளில் பதுங்கி இருந்த 20 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசாரை தாக்கியது உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர்.