கைதான ராணி, ஹேமலதா 
செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய 2 பெண்கள் கைது

விருகம்பாக்கம் மற்றும் சாலிகிராமம் பகுதிகளில் உள்ள சூப்பர் மார்கெட்டில் திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

போரூர்:

விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் சூப்பர் மார்க்கெட் கடை உள்ளது. நேற்று காலை கடைக்குள் வந்த 2 பெண்கள் சந்தேகத்திற்கிடமாக வெளியே சென்றனர்.

கடை ஊழியர்கள் அவர்களிடம் சோதனை செய்த போது பாவாடையில் ரகசிய பைகள் வைத்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள நெய் பாட்டில்களை திருடியது தெரிந்தது.

இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட இருவரும் மதுரையை சேர்ந்த ராணி, லாரி என்கிற ஹேமலதா என்பது தெரிந்தது.

கடந்த 5-ந்தேதி சாலிகிராமத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நெய் பாட்டில்களை திருடியதை ஒப்புக் கொண்டனர்.

மதுரையில் இருந்து சென்னை வரும் இருவரும் பல்வேறு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் கைவரிசை காட்டி திருடிய பொருட்களை விற்று விட்டு மீண்டும் மதுரைக்கு தப்பி சென்று வந்தனர். இருவர் மீதும் ஏற்கனவே வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

விருகம்பாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா, அஜித்குமார் என்பதும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து திருட்டு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். #Tamilnews