சாலை மறியல் 
செய்திகள்

பூந்தமல்லி அருகே 2 கிராமங்களில் லாரியை சிறை பிடித்து சாலை மறியல்

பூந்தமல்லி அருகே தண்ணீர் எடுத்து செல்வதை கண்டித்து 2 கிராம மக்கள் லாரியை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

பூந்தமல்லி:

சென்னை அருகே உள்ள பூந்தமல்லியை அடுத்து பானவேடு, பாரிவாக்கம், கோலப்பன்சேரி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனால் அந்த கிராமங்களில் லாரி இரவு- பகலாக சென்று வருவதோடு விபத்தும் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியபோது தண்ணீர் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.

இந்த நிலையில் அந்த கிராமங்களில் மீண்டும் தண்ணீர் எடுத்து விற்பதாகவும் இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாரிவாக்கம், கோலப்பன்சேகரி கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் 40 அடியில் குடிநீர் கிடைத்தது. இப்போது நிலத்தடி நீர் மட்டம் 300 அடிக்கு குறைந்து விட்டது. ஒரு சிலர் வணிக நோக்கத்தோடு தண்ணீரை விற்பனை செய்கிறார்கள்.

இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது என்றனர்.