குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் கசிவுநீரை குடங்களில் சேகரிக்கும் பொதுமக்கள். 
செய்திகள்

காரிமங்கலம் அருகே குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வரும் 2 கிராம மக்கள்

காரிமங்கலம் அருகே குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வரும் 2 கிராம மக்கள், ஒகேனக்கல் குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் கசிவுநீரை குடங்களில் பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

காரிமங்கலம்:

காரிமங்கலம்  அருகே பைசுஅள்ளி ஊராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். காரிமங்கலம் அருகே பைசுஅள்ளி  ஊராட்சிக்குட்பட்ட கல்லூரான்  கொட்டாய், முருகன் கொட்டாய் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஒகேனக்கல் குடிநீர் அப்பகுதி  மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கபட்டது. அதுவும் பழுது ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 

இதனால் இப்பகுதி மக்கள் 500 மீட்டர் தொலைவில் உள்ள மாட்லாம்பட்டி செல்லும் சாலையில் வரும் ஒகேனக்கல் குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் கசிவுநீரை குடங்களில் சேகரித்து பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகளிடம் மக்கள் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர். 

எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் குழாயை அமைத்து, சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.