ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சியில் தீவிரவாதிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களாக ஊடுருவல் அதிகரித்துள்ளது. இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
ஜம்மு காஷ்மிரின் மச்சில் செக்டார், குப்வாரா மாவட்டம் நவுகாம் செக்டாரைத் தொடர்ந்து இன்று மாலை உரி செக்டாரில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதனால் உஷாரான பாதுகாப்பு படையினர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டபோதிலும், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்த சில மணி நேரத்தில் இந்த ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிகழ்ச்சியின்போது பேசிய மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த முறையில் போராட வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.