செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே மணிமுத்தாறு அணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

மணிமுத்தார் அணையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது அகரகோட்டாளம் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் புவனேஸ்வரன் (வயது 13). அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் ரஞ்சித் (10). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் புவனேஸ்வரனும், ரஞ்சித்தும் அங்குள்ள மணிமுத்தாறு அணைக்கு மீன் பிடிக்க சென்றனர். அணையின் கரையில் இருந்து ரஞ்சித் தூண்டில் மூலம் மீன் பிடித்து கொண்டிருந்தான். அப்போது புவனேஸ்வரன் அணையின் கீழ் பகுதிக்கு சென்று மீன் பிடித்தான்.

சிறிது நேரத்தில் ரஞ்சித்தும் கீழே இறங்கி வந்தான். அப்போது கால் தவறி அணையில் உள்ள தண்ணீரில் விழுந்து விட்டான். அவனை காப்பாற்ற புவனேஸ்வரன் தண்ணீரில் குதித்தான். இருவரும் தண்ணீரில் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் மூச்சு திணறி மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அணையில் மூழ்கி பலியான புவனேஸ்வரன், ரஞ்சித் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அணையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews