கொலை செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம் 
செய்திகள்

காதல் தகராறில் 2 ரவுடிகள் கொலை - பொன்னேரியில் பதட்டம்

பொன்னேரியில் காதல் பிரச்சினை காரணமாக 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரி ரெயில் நிலையம் அருகே உள்ளது ஆலாடு கிராமம்.

நேற்று மாலை இந்த கிராமத்தில் இளைஞர்கள் சிலர் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பொன்னேரி வெண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்த வாலிபர்களான வீரா, சுதாகர் இருவரும் அங்கு சென்றனர்.

ரவுடிகளான இவர்கள் மீது பொன்னேரி, திருபாலை வனம், சோழவரம் போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, கஞ்சா வழக்குகள் உள்ளன.

ரவுடிகள் வந்து தகராறு செய்வதை பார்த்து அங்கிருந்த சிலர், கைப்பந்து விளையாடிய வாலிபர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

2 ரவுடிகள் மீதும் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொன்னேரி போலீசார் விரைந்து சென்று ரவுடிகள் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், உதவி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளார். கும்பலாக தாக்குதல் நடத்தியதில் கொலை நடந்துள்ளதால் யார்-யார் இதில் ஈடுபட்டார்கள்? என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலங்கியுள்ளது. காதல் பிரச்சினை காரணமாகவே ரவுடிகள் வீரா, சுதாகர் இருவரும், கைப்பந்து விளையாடிய வாலிபர்களிடம் தகராறு செய்தது தெரியவந்துள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலே கொலையில் முடிந்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 2 ரவுடிகள் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். இதன் பின்னணி பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கொலை நடந்த ஆலாடு கிராமத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.