சேதராப்பட்டு:
புதுவை மடுகரையில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அதுபோல் அதே பகுதியில் பூட்டி இருந்த அரசு ஊழியர் புருசோத்தமன் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் மடுகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மடுகரை இன்ஸ்பெக்டர் கலைச் செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு மடுகரை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் பூட்டை உடைக்க பயன் படுத்தப்படும் இரும்பு கம்பி மற்றும் கத்தி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விழுப்புரத்தில் திருடி ஓட்டி வந்தது தெரிய வந்தது.
மேலும் இவர்கள் உழவர்கரையை சேர்ந்த ராஜி என்ற ரமணன் (28), மற்றும் ரெட்டிச்சாவடியை சேர்ந்த சந்திரன் (29) என்பதும் இவர்கள் 2 பேரும் மடுகரை கூத்தாண்டவர் கோவில் உண்டியலில் காணிக்கை பணத்தை கொள்ளையடித்தவர்கள் என்பதும் மேலும் இவர்கள் அரசு ஊழியர் புருசோத்தமன் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு கம்பி, செல்போன், ரொக்கப் பணம் ரூ.2 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் கொலை, அடி தடி, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.