ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய எல்லையில், ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துருப்புகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி நேற்று பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தேசிய எல்லையில் அடுத்தடுத்து தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.
எல்லையில் உள்ள இந்திய பாதுகாப்புப் படை முகாம் மற்றும் பொதுமக்கள் இருக்கும் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் ஷெல் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்கினர்.
இதையடுத்து,
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் இருந்து பதில் தாக்குதல் அளிக்கப்பட்டது. பிம்பர் காலி பகுதியில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 4 நாட்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 10 முறை எல்லை ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 14 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் பாகிஸ்தான் ராணுவம் 3 முறை தொடர் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.