செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: இன்று மேலும் இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல்

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று மேலும் இரணடு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் ஒருவரின் மனு உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது.

மாலை மலர்

இந்தியாவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள போட்டியிட்டால் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

அரசியல் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை முடிவு செய்யாத நிலையில், தனி நபர்கள் மனு தாக்கல் செய்யத் தொடங்கி உள்ளனர். மனு தாக்கல் தொடங்கி முதல் மூன்று நாட்களில் 13 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 6 பேரின் மனுக்கள் உடனடியாக தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. நான்காவது நாளான இன்று மேலும் 2 பேர் மனு தாக்கல் செய்தனர்.

டேராடூனைச் சேர்ந்த அஜய் கதூரியா, புதுடெல்லியைச் சேர்ந்த சுஷில் குமார் அகர்வால் ஆகியோர் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதில், கதூரியாவின் மனு, போதிய ஆவணம் இணைக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, வேட்பாளர் எந்த தொகுதியில் வாக்காளராக இருக்கிறாரோ அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியல் நகல் இணைக்கப்பட வேண்டும். ஆனால், கதூரியா அந்த ஆவணத்தை இணைக்காததால அவரது மனு உடனடியாக தள்ளுபடி ஆனது.