தக்கலை:
தக்கலை அருகே திருவிதாங்கோடு காட்டு விளையை சேர்ந்தவர் சாகுல்அமீது இவருக்கு 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அவருக்கு குழந்தை இல்லாததால் மன வேதனையுடன் காணப்பட் டார். மேலும் குழந்தை இல்லாத பிரச்சினை காரணமாக அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 7 மாதத்திற்கு முன்பு அவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் சாகுல் அமீதுக்கும் இன்னொரு பெண்ணிற்கும் இடையே 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் 2-வது மனைவி மூலமும் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. இதனால் அவரை குழந்தை இல்லா ஏக்கம் வாட்டியது.
மேலும் அவருக்கும் 2-வது மனைவிக்கும் இடையே இந்த குறைபாடு பிரச்சினையை ஏற்படுத்தியது. இது சாகுல் அமீதின் மனவேதனையை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் அவர் இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்களிடம் கூறி சோகத்துடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஒரு மரத்தில் தூக்கு போட்ட நிலையில் வேன் டிரைவர் சாகுல் அமீது பிணமாக தொங்கினார். இதுபற்றி அவரது தந்தை அப்துல் அஜீஸ் தக்கலை போலீசில் புகார் செய்தார்.
இதைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சாகுல் அமீது தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது சாவு குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.