களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலப்பத்தை ஆசாத்புரத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் வசந்த் (வயது 22). இவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த அஜாய் கோஸ்குமார். இவரது மகன் செல்வின் சந்தோஷ் (13) சேரன்மகாதேவி அருகே உள்ள பூதத்தான்குடியிருப்பு தனியார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் செல்வின் சந்தோஷ் பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 14-ந்தேதி காலையில் சந்தோஷ் பள்ளி வேனை தவறவிட்டு விட்டார்.
இதையடுத்து வசந்த் தனது மோட்டார் சைக்கிளில் சந்தோஷை பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். மேலப்பத்தை-கீழப்பத்தை சாலையில் முதுகுளம் கரை திருப்பத்தில் பைக் வந்த போது எதிரே கீழவடகரையை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் ராஜா ஓட்டி வந்த டிராக்டர் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த வசந்த், சந்தோஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு கடந்த 14-ந் தேதி வசந்த் இறந்தார். செல்வின் சந்தோசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அவரும் இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டிராக்டர் டிரைவர் சுரேஷ் ராஜாவை கைது செய்தனர். இந்த சாலை மிகவும் குறுகியதாக இருப்பதாகவும், அபாயகரமான வளைவுகளில் வேகத்தடைகள் இல்லாததுமே விபத்துக்கு காரணம் என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சாலையை அகலப்படுத்தவும், வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.