துப்பாக்கிச்சூடு நடைபெற்ற மதுபான விடுதி 
செய்திகள்

அமெரிக்கா: மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் தென்கிழக்கு எல்லையில் தெற்கு கரோலினா மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தின் லன்கஸ்டர் பகுதியில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. வார இறுதி நாள் என்பதால் மதுபான விடுதியில் நேற்று நள்ளிரவு முழுவதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு மதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டை சற்றும் எதிர்பாராத வாடிக்கையாளர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சிதறியடித்து ஓடினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் மதுபான விடுதியை விட்டு உடனடியாக தப்பிச்சென்றனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT