செய்திகள்

பரமக்குடி-முதுகுளத்தூரில் 2 கல்லூரி மாணவிகள் மாயம்

கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமானது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவிகளை தேடி வருகிறார்கள்.

ராமநாதபுரம்:

பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் முத்துகயல்விழி (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள ஆசிரியை பயிற்சி பள்ளியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 19-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற முத்து கயல்விழி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் எமனேஸ்வரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றார்.

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழமணக்கரையை சேர்ந்தவர் முனியசாமி மகள் ஜெயசுமிதா. இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் இருந்த ஜெயசுமிதா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.