ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக தொடர்ந்து டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். மத்தியில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வந்தனர். இதனால் இரு கட்சிகளிடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர இயலாது என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் சூசகமாக தெரிவித்தது. சிறப்பு அந்தஸ்துக்கு பதில் சிறப்பு நிதித் திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் இந்த முடிவு சந்திரபாபு நாயுடுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.
இதனால், மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மந்திரிகள் ஒய்.எஸ்.சவுத்ரி மற்றும் அசோக் கஜபதி ராஜு ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த அதிரடி முடிவிற்கு பா.ஜ.க. இன்று பதிலடி கொடுத்துள்ளது. ஆந்திர அமைச்சரவையிலிருந்து பா.ஜ.க. அமைச்சர்கள் டாக்டர் காமினேனி ஸ்ரீனிவாஸ், பைடிகொண்டல மணிகியாலா ராவ் ஆகியோர் இன்று பதவி விலகினர். அமராவதியில் உள்ள முதல்வர் அலுவலகம் சென்று ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இதனால் ஆந்திர அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.