திருச்சி:
இந்தியாவில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் திருச்சி, உத்திரபிரதேசம் உள்பட 4 இடங்களில் துப்பாக்கி தொழிற் சாலைகள் உள்ளன.
இதில் 100 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அருகே நவல் பட்டில் தொடங்கப்பட்ட திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான துப்பாக்கிகள், குண்டுகள் போன்ற ஆயுதங்கள் தயார் செய்யப்படுகின்றன.
இங்கு பணியில் சேர கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் இந்தியா முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை தேர்வு மையத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தேர்வின் போது யாராவது வேறு நபர்கள் மூலம் தேர்வு எழுதுவதை தடுக்க தேர்வு மையத்தில் தேர்வு எழுத வருவோரின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றவர்கள் திருச்சி உள்பட இந்தியாவில் உள்ள 4 துப்பாக்கி தொழிற் சாலைகளுக்கும் பணிக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் பீகார் உள்பட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிலர் கடந்த 10 மாதங்களாக திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் (எம்.டி.எஸ்.ஆக) பணியாற்றி வந்தனர்.
இதற்கிடையே 2016 மே மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்ந்தவர்களுடைய விரல் ரேகை பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது புதிதாக பணிக்கு சேர்ந்த 4 பேரின் விரல்ரேகை பதிவுகள் ஏற்கனவே எழுத்துத்தேர்வுக்கு வந்தபோது, பதிவாகி இருந்த விரல் ரேகைகளோடு ஒத்துபோகவில்லை.
அவர்கள் 4 பேரும் தேர்வின் போது தங்களுக்கு பதில் வேறு நபர்களை அனுப்பி தேர்வு எழுதி குறுக்கு வழியில் வெற்றி பெற்றது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து துப்பாக்கி தொழிற்சாலையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு சார்பில் சி.பி. ஐ.யிடம் புகார் அளிக்கப்பட் டது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பணிக்கு சேர்ந்த 2 பேர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உறுதி செய்யப்பட்டது. அவர்களை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக மேலும் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
2 நாட்கள் விசாரணைக்கு பிறகு பீகாரைச் சேர்ந்த தனஞ்ஜெயன், உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராம்கோபால் ஆகிய 2 பேரையும் சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் துப்பாக்கி தொழிற்சாலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.