மும்பை:
1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 257 பேர் பலியானார்கள். 713 பேர் காயமடைந்தனர்.
நிழல் உலக தாதா ராவூத் இப்ராகீம் மேற்பார்வையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கில் தாவூத் இப்ராகீம் கூட்டாளியான அபுசலீம், பெரோஸ் அப்துல் ரசீத்கான், தாகீர் மெர்ச்சன்ட், கரிமுல்லாகான், ரியாஸ் சித்திக் ஆகியோரை குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது. அபுசலீம், கரிமுல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தாகீர் மெர்ச்சன்ட், பெரோசுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ரியாஸ் சித்திக்குக்கு 10 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியான தாகீர் மர்ச்சன்ட் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் இன்று மரணம் அடைந்தார்.
இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மும்பை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியான தாகீர் மர்ச்சன்ட் எரவாடா சிறைச்சாலையில் இருந்து வருகிறார். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, புனேவில் உள்ள சாசூன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிகாலை 3.45 மணிக்கு மரணம் அடைந்தார் என தெரிவித்துள்ளனர். #Mumbaiblast #Tamilnews