செய்திகள்

‘ஆன்-லைன்’ மணல் விற்பனைக்கு வரவேற்பு: 2 நாட்களில் 18 ஆயிரம் பேர் முன்பதிவு

‘ஆன்-லைன்’ மூலம் மணல் விற்பனைக்கு பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மணலுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மணல் பெறும் வகையிலும், மணலுக்காக லாரிகள் காத்திருப்பதை தடுக்கவும் குவாரிகளில் மணல் அள்ள ‘ஆன்-லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக தமிழ்நாடு மணல் இணையதள சேவை ( www.tnsa-nd.in ) என்ற புதிய இணையதளம், மொபைல் ‘ஆப்’-பை கடந்த மாதம் 28-ந்தேதி அவர் தொடங்கி வைத்தார்.

‘ஆன்-லைன்’ முன்பதிவு செய்வது எப்படி? என்பது குறித்து லாரி உரிமையாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும் மணல் அள்ளுவதில் உள்ள விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து 1-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்படி 1-ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள் மணல் அள்ள முன்பதிவு செய்ய தொடங்கினர். ஒரு நாளுக்கு 6 ஆயிரம் லோடு மணல் மட்டுமே அள்ள அனுமதிக்கப்படும்.

மணல் லாரியின் எண், லாரியின் மாடல், எந்த ஊரில் மணல் அள்ள வேண்டும்? ‘பெர்மிட்’ ரத்தாகும் நாள், எவ்வளவு லோடு மணல் தேவை? லாரி உரிமையாளர் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவேண்டும். பின்னர் தங்களுக்கு விருப்பமான வரிசையை தேர்வு செய்து அந்த வகை பிரிவில் மணலை அள்ள அனுமதி பெறலாம்.

முதல் நாளில் 14 ஆயிரத்து 897 லாரி உரிமையாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். பொதுமக்கள் சார்பில் 400 பேர் விண்ணப்பித்தனர். இதில் தகுதி வாய்ந்த 12 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. நேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 2 நாட்களில் மட்டும் சுமார் 18 ஆயிரம் பேர் மணலுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

மணலுக்கு தேவையான தொகையை அப்போதே செலுத்த வேண்டும். ஒருவர் எத்தனை முறை வேண்டும் என்றாலும் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு முறையால் மணல் விலை வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரிகள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:-

இதுநாள் வரை மணலுக்காக லாரிகள் பெருமளவு பல நாட்களாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வந்தது. லாரிகளின் டிரைவர்களுக்கு காத்திருப்பு கூலியாக ஒரு நாளுக்கு ரூ.500 அளிக்க வேண்டியது இருந்தது. திருச்சியில் இருந்து சென்னைக்கு மணல் கொண்டு வர ரூ.3 ஆயிரம் தான் செலவு ஆகும். ஆனால் டிரைவர்கள்-உதவியாளர் காத்திருப்பு கூலி, திட்டமிடா சுங்கவரி கட்டணம் போன்றவற்றால் ரூ.8 ஆயிரம் வரை செலவாகியது.

‘ஆன்-லைன்’ திட்டம் மூலம் இனி லாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. டிரைவர்களுக்கு காத்திருப்பு கூலியும் கொடுக்க தேவையில்லை. திட்டமிட்டு மணல் அள்ள செல்வதின் மூலம் சுங்கவரியில் கட்டணத்தை (பேக் ரைடு) முன்கூட்டியே செலுத்திவிட முடியும். இதனால் ரூ.1,000 வரை கூடுதல் செலவு தவிர்க்கப்படும். தினம் விதிக்கப்பட்டு வரும் இன்சூரன்சு வரியும் தவிர்க்கலாம்.

தற்போது சந்தையில் ஒரு லோடு (3½ யூனிட்) மணல் ரூ.40 ஆயிரத்துக்கும், ஒரு லோடு (2 யூனிட்) மணல் ரூ.27 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. ‘ஆன்-லைன்’ மூலம் மணல் அள்ளுவதில் மணலின் விலை 25 சதவீதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஒரு லோடு மணலின் விலையில் ரூ.10 ஆயிரம் வரை மிச்சமாகும். எனினும் ஒரு நாளுக்கு 6 ஆயிரம் லோடு மணல் மட்டுமே அள்ள வழங்கப்படும் அனுமதியை அரசு அதிகரிக்க வேண்டும்.