செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் இணையதளத்தில் இருந்து நீக்கம்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள், படங்கள் சட்டசபை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மாலை மலர்

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதில் ஜக்கையன் மட்டும் பின்னர் அந்த அணியில் இருந்து விலகினார். இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களையும் அந்த பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து கடந்த 18-ந் தேதி சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆண்டிப்பட்டி தங்க தமிழ்செல்வன், பெரம்பூர் பி.வெற்றிவேல், திருப்போரூர் மு.கோதண்டபாணி, பூந்தமல்லி டி.ஏ.ஏழுமலை உள்பட 18 பேரின் பெயர்கள், படங்கள் சட்டசபை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், அவர்களின் தொகுதிகளும் காலியாக உள்ளதாக இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.