செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் மூத்த வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்து இருப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் மூத்த வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த வி‌ஷயத்தில் தி.மு.க. அடுத்து எடுக்க வேண்டிய வி‌ஷயங்கள் மற்றும் எந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 89 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.