எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், இதனால் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரிடம் மனு கொடுத்தனர்.
இதை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதேபோல் சட்ட சபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்தும் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்குகளை நீதிபதி துரைசாமி விசாரித்து வந்தார்.