செய்திகள்

எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்கிறது: வழக்கு விசாரணை நவம்பர் 2-ம்தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு விசாரணை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதால், தகுதிநீக்கமும் தொடர்கிறது.

மாலை மலர்

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் டிடிவி தினகரன், முதல்வர் மற்றும் சபாநாயகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி மூன்று தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்து வாதாடி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்பினர் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு தங்களுக்கு போதிய அவகாசம் இல்லை என்று தெரிவித்தனர். இதேபோல் முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தினகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் முதல்வர் மீது குற்றச்சாட்டு அதிகம் இருப்பதாக தெரிவித்தார். வழக்கை ஒத்திவைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். மேலும், அக்டோபர் 23-ம் தேதிக்குள் மூன்று தரப்பினரும் ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.